ஹைதராபாத் அருகே கேஷாம்பெட் என்ற ஊரில், மாதவி என்ற பெண் தனது கணவர் கோப்பு குமாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் மாதவியிடம் தகராறு செய்வார். இந்நிலையில் எப்போதும் போல் சனிக்கிழமை இரவு, மது குடித்துவிட்டு வந்து மாதவியுடன் தகராறு செய்தார். இதனால் கோபமடைந்த மாதவி, செங்கல்லால் குமாரின் தலையில் பலமுறை அடித்தார். இதைப் பார்த்த அவர்களின் 12 வயது மகன், “அம்மா, அப்பாவை விடு” என்று கெஞ்சியும், மாதவி நிறுத்தவில்லை. இறுதியில், குமார் இறந்துவிட்டார்.

பின்னர், மாதவி குமாரின் உடலை வீட்டு முன் உள்ள நீர் தொட்டியில் போட்டு, வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்துவிட்டு தப்பி ஓடினார். மறுநாள், குமாரின் அண்ணன் ஜங்கையா குமாரை தேடி வந்தபோது, உடல் தொட்டியில் கிடைத்தது. மகன், அம்மா அடித்ததாக போலீஸிடம் கூறியுள்ளார். மாதவியும் குமாரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும், குமாருக்கு மது பழக்கமும் வேறு உறவும் இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இப்போது போலீஸ் கொலை வழக்கு பதிவு செய்து மாதவியை தேடி வருகின்றனர்.