குஜராத் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய ஒரு காதல் கதை, தற்போது சட்டவிரோத ஊடுருவல் காரணமாகச் சட்டத்தின் பிடியில் சிக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருண்குமார் பன்சிபாய் படேல் என்பவருடன், பங்களாதேஷைச் சேர்ந்த காஜுலி என்ற முஸ்லிம் பெண் முகநூல் வழியாக நட்பு கொண்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் தனக்குத் திருமணம் செய்யக் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததால், காஜுலி தனது காதலரைச் சந்திப்பதற்காகச் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா வழியாக காதலன் ஊருக்கு வந்த அவர், தனது பெயரை காஜல் என மாற்றிக்கொண்டு, இந்து மத சம்பிரதாயப்படி தருண் பட்டேலைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தத் தம்பதியினருக்கு தற்போது தியான் (8), அர்ஷ் (2) என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த பல ஆண்டுகளாக தங்களின் ரகசியத்தை மறைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் கடுமையான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, காஜல் பங்களாதேஷில் இருக்கும் தனது உடல்நலம் குன்றிய தாயைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அந்தப் போன் அழைப்பைத் துல்லியமாகத் தடமறிந்த உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவு காஜலைக் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டு, நாட்டை விட்டு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தனது மனைவி எந்தவொரு குற்றவாளியும் அல்ல என்றும், காதலின் காரணமாக மட்டுமே இந்தியா வந்து இந்து மதத்திற்கு மாறியுள்ள அவரை மீண்டும் பங்களாதேஷிற்குத் திருப்பி அனுப்பினால் அங்குள்ள தீவிரவாதச் சூழலால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்றும் அவரது கணவர் தருண் படேல் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.