வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்க ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) என்ற அதிரடி வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2 மணியளவில் அமெரிக்கப் போர் விமானங்கள் கராகஸில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது சரமாரி குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் மதுரோவின் பாதுகாப்புப் படையில் இருந்த வீரர்கள் மற்றும் அதிபர் மாளிகைக்கு அருகே வசித்து வந்த பொதுமக்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெனிசுலா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வான்வழித் தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின; நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், “அமெரிக்காவிற்கு சாதகமான ஜனநாயக அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் அங்கேயே தங்கியிருக்கும். வெனிசுலாவின் பிரம்மாண்டமான எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நேரடியாக நிர்வகிக்கும்” என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்த ராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் மேலும் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் கூட காயமடையவில்லை. ஒட்டுமொத்தத் தாக்குதலையும் எனது அறையில் இருந்தபடி ஒரு ‘டிவி ஷோ’ (TV Show) பார்ப்பது போல நேரலையில் பார்த்தேன். இது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல்கல்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதிபர் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டதால், அந்நாட்டில் அரசியல் வெற்றிடம் உருவானது. இதனைத் தொடர்ந்து, வெனிசுலா உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் இதற்கு என்ன எதிர்வினையாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
