தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் இன்று அதிகாலை நடத்திய சரமாரித் தாக்குதலில், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸை வெனிசுலா உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க மதுரோ தவறிவிட்டதாகவும், அதற்கு அவர் உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 35 படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 115 பேர் உயிரிழந்தனர்.

தனது நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயல்வதாக மதுரோ குற்றம் சாட்டி வந்த நிலையில், அதிகாலை தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்து குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதல் குறித்து புளோரிடாவில் உள்ள தனது கிளப்பில் முகாமிட்டுள்ள அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், “அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலா நிர்வாகத்தை தற்காலிகமாக அமெரிக்காவே கவனிக்கும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். இதனிடையே, வெனிசுலாவில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் பொருளாதாரத் துறைகளைக் கவனித்து வந்த டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் இந்த நேரடி ராணுவத் தலையீடும், ஆட்சி மாற்றமும் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.