தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் நேற்று அதிகாலை நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டை அமெரிக்கா தற்காலிகமாக நிர்வாகம் செய்யும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அதிபர் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் டிரம்ப் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள ராணுவத் தளங்கள் உட்பட 7 முக்கிய இடங்களில் அமெரிக்கப் படைகள் சரமாரி வான்வழித் தாக்குதலை நடத்தின.
இந்தத் தாக்குதலால் வெனிசுலாவின் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது. முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த ராணுவ நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்கப் படைகள் நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் தாக்குதல் நடத்தின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் கண்டிராத மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த நடவடிக்கை இது. கராகஸின் பாதுகாக்கப்பட்ட ராணுவக் கோட்டைக்குள் புகுந்து சர்வாதிகாரி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்துள்ளோம்” என்றார்.
மேலும், கண்கள் கட்டப்பட்ட நிலையில் மதுரோ இருக்கும் புகைப்படத்தை டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவர்கள் நியூயார்க் அல்லது புளோரிடா நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தற்போதைய சூழல் குறித்து டிரம்ப் மேலும் கூறுகையில்: வெனிசுலாவில் ஒரு முறையான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும். வெனிசுலாவின் உடைந்த உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் சீரமைக்கும். இதன் மூலம் அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும். அமெரிக்க இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை மதுரோவின் கைது மூலம் முறியடித்துள்ளோம். வெனிசுலா மக்களை மீண்டும் பணக்காரர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றுவதே எங்கள் இலக்கு” என டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
