வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள அதிபரின் பலத்த பாதுகாப்புமிக்க இல்லத்திற்குள் புகுந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

நேற்று நள்ளிரவு சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த அதிரடி சோதனையில், அமெரிக்க இராணுவத்தின் புகழ்பெற்ற ‘டெல்டா ஃபோர்ஸ்’ (Delta Force) மற்றும் எஃப்பிஐ (FBI) முகவர்கள் ஈடுபட்டனர். அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது படுக்கையறைக்கே சென்ற அமெரிக்கப் படையினர் இருவரையும் சிறைபிடித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது வெனிசுலாவின் முக்கியப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “மதுரோ ஒரு பாதுகாப்பான கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது அவரும் அவரது மனைவியும் அமெரிக்கப் போர்க்கப்பலில் வைக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை அவர்கள் நியூயார்க் கொண்டு வரப்பட்டு, அங்கு நீதிமன்ற விசாரணையைச் சந்திப்பார்கள்” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுரோ மற்றும் அவரது மனைவி மீது சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி கூறுகையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே வெனிசுலா மீது அமெரிக்கா கடும் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. போதைப்பொருள் கடத்தல் பாதைகளைக் குறிவைத்து அமெரிக்கக் கடற்படை நிலைகொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் சிஐஏ (CIA) நடத்திய ட்ரோன் தாக்குதலில் வெனிசுலாவின் முக்கியத் தளங்கள் சேதமடைந்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.