ஈரானின் புஷேர் நகரில் உள்ள முக்கிய அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நிலையத்தில் ரஷ்ய ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரான் தனது மின்சாரத் தேவையில் சுமார் 1000 மெகாவாட்டை இந்த ஆலையிலிருந்தே பெறுகிறது. இந்த அணுமின் நிலையம் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டால், ஈரான் முழுவதும் கடும் மின்சார நெருக்கடி ஏற்படுவதுடன், அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுமின் நிலையம் சேதமடைந்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு ஈரானை மட்டுமல்லாமல், காற்று வீசும் திசையினால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை வளைகுடா நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பொருளாதாரத்தை அழிக்க எண்ணி, வேண்டுமென்றே எண்ணெய் ஆலைகளையும் அணுமின் நிலையங்களையும் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
