மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கேஸ்லை கிராமத்தில், தந்தை ஒருவரே தனது 3 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ள நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரத்தன் சிங் உய்கே என்ற அந்த நபர், தனது மனைவி சுனிதா கால்நடைகளை மேய்க்கச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் குளித்துக் கொண்டிருந்த தனது மகன் வீரேந்திர குமாரை திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தில் கோடரியால் தாக்கியுள்ளார். இதில் குழந்தையின் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அந்த இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரூப்ஜர் காவல்துறையினர், தப்பியோட முயன்ற ரத்தன் சிங்கை கைது செய்தனர். விசாரணையின் போது, தனக்கு திடீரென ஏற்பட்ட கோபத்தாலேயே குழந்தையை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், ஒரு பச்சிளம் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு அவரைத் தூண்டிய உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.