உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியான ரீதா என்பவரது வங்கிக் கணக்கில், எதிர்பாராத விதமாக சுமார் 10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தனது வங்கி இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றபோது, கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் சந்தேகம் தீராமல் மற்றொரு ஏடிஎம் இயந்திரத்திலும் சரிபார்த்தபோது அதே தொகை காட்டியுள்ளது. அன்று வங்கி விடுமுறை என்பதால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க முடியாத சூழல் இருந்தபோதிலும், அந்தப் பெண்மணி சிறிதும் சலனமடையாமல் நேர்மையுடன் செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் வங்கி திறந்தவுடன் அதிகாரிகளை நேரில் சந்தித்து இவ்வளவு பெரிய தொகை தனது கணக்கிற்குத் தவறாக வந்துள்ளது குறித்து ரீதா புகார் அளித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று தெரிவித்த வங்கி அதிகாரிகள், அதனைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், தனக்குச் சொந்தமில்லாத பணத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ரீதாவின் செயலைப் பாராட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவருக்குப் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.