உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள திகில் கருப்பொருள் (Horror-themed) உணவகத்தில், ஊழியர் ஒருவர் பேய் வேடமிட்டு சிறுவன் ஒருவனை மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியின் சேத்கஞ்ச் பகுதியில் ‘கங்கால் ஹாரர் ரெஸ்டாரண்ட்’ (Kankal Horror Restaurant) என்ற பெயரில் திகில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களைப் பயமுறுத்துவதற்காக ஊழியர்கள் பேய் மற்றும் எலும்புக்கூடு வேடமிட்டு உணவு பரிமாறுவது வழக்கம்.

சமீபத்தில் இந்த உணவகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், பேய் வேடமிட்ட ஊழியர் ஒருவர் அங்கிருந்த ஒரு சிறுவனை நோக்கி மெதுவாகச் சென்று பயமுறுத்துகிறார். இதனால் நிலைகுலைந்த அந்தச் சிறுவன், “வேண்டாம் அப்பா… வேண்டாம் அப்பா…”  என்று கதறி அழுதபடி கெஞ்சுகிறான். சிறுவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதபோதிலும், அந்த ஊழியர் விலகிச் செல்லாமல் தொடர்ந்து மிரட்டியதும், அருகில் இருந்த பெற்றோர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இதுவரை 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இணையவாசிகள் பலரும் உணவகத்தின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது வேடிக்கையானது அல்ல. அந்தச் சிறுவன் உண்மையிலேயே பயந்துபோயுள்ளான். அவன் அழுது கெஞ்சுவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்கள் தேவையற்றவை. பயத்தினால் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். பெற்றோர் ஏன் இத்தகைய இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

வாரணாசியின் முதல் திகில் உணவகமான இது, மங்கலான வெளிச்சம், செயற்கைப் புகை மற்றும் சுவர்களில் தொங்கும் எலும்புக்கூடுகள் எனப் பயமுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இது விளம்பரப்படுத்தப்பட்டாலும், தற்போது சிறுவர்களைத் துயரத்திற்கு உள்ளாக்கும் இத்தகைய ‘திகில்’ யுக்திகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் சமூக வலைதளப் புகழுக்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் குழந்தைகளின் உணர்வுகளைக் காயப்படுத்துவது அறமற்ற செயல் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.