மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதைக் கண்ட நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் மிகுந்த அச்சமடைந்தனர்.

மேலும் உயிருக்குப் போராடும் நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியில், ஜன்னல் கண்ணாடிகளுக்கு அப்பால் அந்தப் பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடிய காட்சி அங்கிருந்தவர்களை உறைய வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

“>

இதனால் மருத்துவமனைக்கு அருகிலுள்ள தோட்டம் மற்றும் புதர்கள் சரியாகப் பராமரிக்கப்படாததே இது போன்ற விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனை சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் கழிவறைகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகப் பாம்புகள் எளிதாக உள்ளே வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.