இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், சமூக ஊடகக்Content Creator-வுமான சித்தார்த் பதாரியா, தனது பெற்றோருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். தன் தந்தைக்கு ஒரு சாதாரண ‘ஸ்கூட்டர்’ வாங்கப் போவதாகக் கூறி, அதற்கான ஆலோசனைகளைத் தனது தாயிடமே கேட்டு திட்டமிட்டுள்ளார்.

மேலும் தேவையில்லாமல் பணம் செலவழிப்பதாக தந்தை கோபித்துக் கொள்வார் என்று தாய் பதறியபடியே அவருடன் வந்துள்ளார். ஆனால், அவர்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குச் சென்ற சில நொடிகளில், சித்தார்த் தனது தந்தையிடம் ஒரு சாவியைக் கொடுத்துள்ளார். தந்தை அந்த சாவியை அழுத்தியதும், அங்கிருந்த புத்தம் புதிய ‘பிஎம்டபிள்யூ எக்ஸ்1’ சொகுசு காரின் முகப்பு விளக்குகள் மின்னின. தான் வாங்கியது ஸ்கூட்டர் அல்ல, சொகுசு கார் என்பதை மகன் உணர்த்திய அந்த நொடியில், அந்த தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சியால் உணர்ச்சிவசப்பட்ட தாய், தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு கண்ணீர் மல்க கார் இருக்கையில் அமர்ந்தார். “என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லை” என்று அவர் நாத்தழுதழுக்கக் கூறினார். தந்தை வார்த்தைகளின்றி மௌனமாக நின்று நெகிழ்ந்துபோனார்.

பல வருடங்களாகத் தமக்காகப் பாடுபட்ட பெற்றோருக்கு, அவர்கள் செய்த தியாகங்களுக்குப் பிரதிபலனாக இந்த விலையுயர்ந்த காரைச் சித்தார்த் பரிசளித்துள்ளார். இந்த மனதைத் தொடும் குடும்ப வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல மில்லியன் கணக்கான நெட்டிசன்களை நெகிழவைத்துள்ளது.