பீகார் மாநிலத்தில், கணவன் ஒருவர் தனது மனைவிக்கு, அவரது காதலனுடன் பஞ்சாயத்து மற்றும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பகுவாரா பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனூப் ராம். இவருக்கும் ஜோதி தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அனூப் ராமின் தொழில் மற்றும் சொத்துக்கள் மேற்கு வங்க மாநிலம் ஆசனசோல் பகுதியில் இருப்பதால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே குடியேறி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் அனூப்பின் நண்பரான சுஜித் தாஸ் என்பவருடன் ஜோதி தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சமீபகாலமாக சுஜித் தாஸ், அனூப்பின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால் இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் தெரியவந்தது.

இதுகுறித்து கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பலமுறை பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஜோதி தேவிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால், கணவனுடன் வாழ மறுத்த ஜோதி, தன் காதலன் சுஜித்துடன் தான் வாழ்வேன் என  பிடிவாதமாக நின்றுள்ளார். மனைவியின் பிடிவாதத்தை அடுத்து, வேறு வழியின்றி பஞ்சாயத்து மற்றும் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், வெள்ளிக்கிழமை அன்று பகுவாரா பட்டி தேவி கோவிலில் ஜோதி தேவிக்கும், அவரது காதலன் சுஜித்திற்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தத் திருமணத்தின் போது மணமேடையிலேயே ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தனது மகளின் செயலால் ஆத்திரமடைந்த ஜோதியின் தாய், கோவில் வளாகத்திலேயே தனது மகள் ஜோதியையும், அவளது புதிய கணவன் சுஜித்தையும் செருப்பால் அடித்துத் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

திருமணம் முடிந்த பின், தனது 4 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஜோதி விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குப் பஞ்சாயத்தாரும், அனூப்பின் குடும்பத்தினரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். 4 குழந்தைகளும் தந்தை அனூப் ராமினிடமே ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, ஜோதி தேவி தனது புதிய கணவருடன்  புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சித் தலைவர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், “கடந்த மூன்று நாட்களாகப் பஞ்சாயத்து மூலம் சமரசம் பேச முயன்றோம். ஆனால் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அனைத்து தரப்பினரின் முன்னிலையிலும் இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது” என்றார். ஒரு சினிமா கதையை மிஞ்சும் வகையில் நடந்துள்ள இந்தத் திருமணம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.