இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்காக ‘ஃப்ரீடம் சேல்’ சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.1,279 முதல் தொடங்கும் உள்நாட்டு டிக்கெட் விலைகள் மற்றும் ரூ.4,279 முதல் தொடங்கும் சர்வதேச டிக்கெட் விலைகளுடன், மொத்தம் சுமார் 50 லட்சம் இருக்கைகள் இந்த சலுகையில் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 19, 2024 முதல் மார்ச் 31, 2026 வரை பயணிக்க விரும்பும் பயணிகள், ஆகஸ்ட் 15 வரை முன்பதிவு செய்யலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10 முதல் www.airindiaexpress.com மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப்பில் பிரத்யேகமாக முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து முக்கிய முன்பதிவு சேனல்களிலும் இந்த சலுகை கிடைக்கும். ஓணம், துர்கா பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களும் இந்த சலுகையில் அடங்கும். பயணிகளுக்கான ‘எக்ஸ்பிரஸ் லைட்’, ‘எக்ஸ்பிரஸ் வால்யூ’ மற்றும் வணிக வகுப்பு ‘எக்ஸ்பிரஸ் பிஸ்’ போன்ற விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.

தற்போது 116 விமானங்களைக் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைத்து, தினசரி 500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. சமீபத்தில் சேர்க்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட புதிய விமானங்களில், 58 அங்குலம் வரை இருக்கை இடைவெளி கொண்ட ‘எக்ஸ்பிரஸ் பிஸ்’ பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.