உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் அதிர்ச்சி அடங்குமுன்பே, நொய்டாவில் இன்னொரு மோசடி கும்பல் சர்வதேச போலீஸ் நிலையம் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை (CBCD) அலுவலகம் போல செயல்பட்டது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் போலீசார் கடந்த மாதம் ஹர்ஷ்வர்தன் ஜெயினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் பெயரில் மோசடி செய்ததற்காக கைது செய்திருந்தனர். அதேபோன்று, நொய்டா சம்பவமும் போலி அலுவலகங்கள் மற்றும் இணையதளம் மூலமாக மோசடிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

போலீசார் நடத்திய திடீர் சோதனையில், குற்றவாளிகள் அரசு அதிகாரிகள் போல நடித்தும், போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்கள் மற்றும் போலீஸ் சின்னங்களைப் பயன்படுத்தியும் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களிடம் பணம் பறிப்பதோடு மட்டுமல்லாமல், சில அரசு ஊழியர்களையும் ஏமாற்றி இருந்தது தெரியவந்தது. இவர்கள் www.intlpcrib.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பின் பெயரில் மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, கும்பலின் பின்னணி, இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் விவரங்கள், பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட விபரங்களை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் அரசு அமைப்புகள் கூட போலி அடையாளங்களால் எவ்வளவு எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதற்கான இன்னொரு எச்சரிக்கையாக உள்ளது.