திருச்சூர் மக்களவை தொகுதி எம்.பி. மற்றும் மத்திய அமைச்சரான பாஜக மூத்த தலைவர் சுரேஷ் கோபி, தனது தொகுதி மக்களால் நீண்ட காலமாக “அணுக முடியாதவர்” என கேரள மாநில மாணவர் சங்கம் (KSU) தலைவர் கோகுல் குருவாயூர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக அவர் தொகுதிக்கு வருகை தரவில்லை என்றும், சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மௌனம் காத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலின் போது கிறிஸ்தவ வாக்குகளை கவர தேவாலயத்திற்கு தங்க கிரீடம் வழங்கிய கோபி, தற்போது பாஜக ஆளும் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் அவமானப்படுத்தப்பட்டபோதும், கைது செய்யப்பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோகுல் குற்றம்சாட்டினார். திருச்சூர் மாநகராட்சியின் கீழ் செயல்படும் முக்கிய மத்திய அரசுத் திட்டத்தைத் தொடங்க அழைத்தபோதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு காவல்துறைக்கு ‘காணவில்லை’ புகார் மின்னஞ்சல் மூலம் அளிக்கப்பட்டது. திங்கட்கிழமை அச்சு நகலை சமர்ப்பிக்க இருப்பதாகவும், “காணாமல் போன மத்திய அமைச்சரை” கண்டுபிடிக்க மாவட்டம் முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் துவங்கப்படும் என்றும் KSU தலைவர் அறிவித்தார்.
