ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியின் முன்னணி கால்பந்து நட்சத்திரமான லமின் யமாலை அப்படியே உரித்து வைத்தது போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ள 15 வயது சிறுவன் ஒருவன் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவன் ஆவான். சக்குவல்லி பகுதியைச் சேர்ந்த ஆலன் ஜேம்ஸ் என்ற பத்தாம் வகுப்பு மாணவர், அந்த உலகப் புகழ்பெற்ற வீரரின் முகவெட்டு, சிகையலங்காரம் மற்றும் புன்னகையை அப்படியே கொண்டுள்ளதால் உள்ளூர் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வந்தார். இதற்கிடையில், உள்ளூர் விலாகர் ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இவனது வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.
#WATCH | Kollam, Keralam | 15-year-old schoolboy Allen James from Chakkuvally goes viral for his uncanny resemblance to Spanish footballer Lamine Yamal. pic.twitter.com/5buBZgJGqA
— ANI (@ANI) September 1, 2026
கால்பந்து மீது தீவிர ஆர்வம் கொண்ட இந்த இளம் மாணவன், அரசுப் பள்ளியில் படித்து வருவதோடு தன் பள்ளி அணிக்காகத் தடுப்பு ஆட்டக்காரராகவும் (Defender) களமிறங்கி விளையாடி வருகிறார். அர்ஜென்டினா அணியும் லியோனல் மெசியும் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்று கூறும் ஆலன், யமாலின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். இந்த திடீர் வைரல் புகழ் காரணமாக வெறும் 200 ஃபாலோவர்களை மட்டும் கொண்டிருந்த இவரது சமூக வலைதளப் பக்கம் தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கடந்துள்ளதுடன், பல்வேறு உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கும் இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்த எதிர்பாராத பிரபலத்தால் தனது வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கும் ஆலன் ஜேம்ஸ், தன்னை நேரில் பார்க்க வருபவர்களையும் சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடுகிறார். ஆன்லைன் வழியிலான சில கிண்டல் கேலிகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத இவனது ஒரே ஒரு மிகப்பெரிய ஆசை, தான் உருவத்தில் ஒத்திருக்கும் உண்மையான கால்பந்து ஜாம்பவான் லமின் யமாலிடம் இருந்து தனக்கு ஒரு சிறு குறுஞ்செய்தி வரவேண்டும் என்பது மட்டுமே ஆகும்.
