ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய விளக்கம் அளித்துள்ளது. பிறந்த தேதியை மாற்றுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முதல் முறை மாற்றத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த திருத்தங்களுக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பிறந்த தேதியை மாற்றும் நடைமுறை அனுமதிக்கப்படாது என்றும், சரியான ஆவணங்களின் அடிப்படையிலேயே மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிறந்த தேதியைத் திருத்த விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், UIDAI ஏற்றுக்கொள்ளும் செல்லுபடியாகும் பிறந்த தேதி ஆதார ஆவணத்தை சமர்ப்பிக்கலாம். 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிறந்த தேதி ஒருமுறை சரிபார்க்கப்பட்டு மாற்றப்பட்டிருந்தால், அடுத்தடுத்த திருத்தங்களுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். குறிப்பாக, முன்பு பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதே பிறப்புப் பதிவு எண்ணைக் கொண்டும் அதே பதிவாளரால் வழங்கப்பட்டதாகவும் இருக்கும் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், ஆதார் பதிவின்போது ஆபரேட்டரின் தவறால் பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அசல் ஆவணங்களில் உள்ள சரியான தேதிக்கு ஏற்ப திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்படலாம். ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் தற்போது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தாலோ அல்லது கிடைக்காத சூழ்நிலையில் இருந்தாலோ, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சுய உறுதிமொழி உள்ளிட்ட மாற்று நடைமுறைகள் பயன்படுத்தப்படலாம். வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கான பிறந்த தேதி திருத்தத்துக்கும் தனித்துவமான கட்டுப்பாடுகள் உள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், போலியான அல்லது மோசடியாகப் பெறப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் பதிவில் பிறந்த தேதி மாற்றப்பட்டிருந்தால், அதனைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், ஆவணச் சரிபார்ப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆதார் பதிவு செய்தபோது குறிப்பிடப்பட்ட வயதைவிட உண்மையான வயது அதிகமாக இருப்பது பின்னர் தெரியவந்தால், மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படும் அபாயமும் இருப்பதாக UIDAI எச்சரித்துள்ளது. எனவே, ஆதாரில் பிறந்த தேதியை மாற்ற விரும்புவோர் சரியான மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்களுடன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.