கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணைக்காக, கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஒரு சாதாரணக் கட்சியின் தலைவராக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் தவெக தலைவர் விஜய்.
ஆனால், காலச்சக்கரம் சுழன்றதில், இன்றைக்கு அதே டெல்லிக்கு ஒரு சாதாரணக் கட்சியின் தலைவராக இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் முதலமைச்சராக மிகக் கம்பீரமாகவும், மாஸாகவும் மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க இருக்கிறார் முதல்வர் விஜய். தனது இந்த அதிரடியான டெல்லி பயணத்தின் போது, இந்திய அரசியல் வட்டாரத்தையே உற்றுநோக்க வைக்கும் பல மெகா சந்திப்புகளுக்கு முதல்வர் விஜய் விரிவான திட்டங்களை வகுத்துள்ளார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேச உள்ளதால், இந்த டெல்லி பயணம் இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
