பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் தான் முழுமையாக காரணம் என மூத்த தலைவர் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி, அன்புமணியின் செயல்பாடுகள் காரணமாகவே கட்சி கடுமையான சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக உயர்த்தி அவருக்கு அரசியல் அடையாளம் அளித்ததாக ஜி.கே. மணி கூறினார். அதே நேரத்தில், அன்புமணி மத்திய அமைச்சராகக் கூடாது என்பதில் ஜெ.குரு உறுதியாக இருந்ததாகவும் அவர் நினைவூட்டினார். அன்புமணியின் செயல்பாடுகள் காரணமாக ராமதாஸ் மனவேதனையடைந்து கண்ணீர் வடித்த சம்பவங்களும் உள்ளதாக கூறிய ஜி.கே. மணி, இந்நிலையில் ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இதுபோன்ற கருத்துகளை பேசுவதற்கு முன் அன்புமணி மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும் என்றார்.
அன்புமணியால் பா.ம.க. சந்தித்துள்ள சோதனைகளும் நெருக்கடிகளும் சொல்லி மாளாத அளவுக்கு இருப்பதாக குறிப்பிட்ட ஜி.கே. மணி, ஒருகாலத்தில் “என் தந்தைக்கு அடுத்தபடியாக உங்களை நினைக்கிறேன்” என அன்புமணி தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். அவரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என ராமதாஸிடம் கூறியதே நான்தான்.
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தானே காரணம் என அன்புமணி பேசிவருவதாக கூறிய ஜி.கே. மணி, அந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார். மனதளவில் கூட துரோகத்தை நினைக்காத தன்னை துரோகி என விமர்சிப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அன்புமணிக்கு ஒருபோதும் துரோகம் செய்ததில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அன்புமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என கட்சியில் முதலில் பேசியவரும், அவரை மத்திய அமைச்சராக ஆக்க வேண்டும் என ராமதாஸிடம் வலியுறுத்தியவரும் தானே என ஜி.கே. மணி கூறினார். மேலும், மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று கட்சியினரிடம் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். தந்தையும் மகனையும் தானே பிரித்து விட்டதாக அன்புமணி கூறுவது எந்த மனசாட்சியுமற்ற பேச்சு என்றும், அதுபோன்ற குற்றச்சாட்டுகள் தன்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாகவும் ஜி.கே. மணி கூறினார்.
