சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் நோய் மற்றும் ரகசிய மருந்து புகார்கள் உலகத்தையே அதிரவைத்துள்ளன. ரஷ்யப் பெண்ணுடன் இருந்த தொடர்பால் பாலியல் நோய் வந்ததாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டாவிற்குத் தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க எப்ஸ்டீனிடம் பில்கேட்ஸ் உதவி கேட்டதாகவும் அந்த மின்னஞ்சல்களில் கூறப்பட்டுள்ளது. 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பில்கேட்ஸ் தரப்பிலிருந்து தற்போது அதிரடியான விளக்கங்கள் வெளியாகியுள்ளன.
இந்த மின்னஞ்சல்கள் முற்றிலும் போலியானவை என்றும், எப்ஸ்டீனைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் தான் வருந்துவதாகவும் பில்கேட்ஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனுடன் சில முறை இரவு விருந்துகளில் பங்கேற்றது உண்மைதான், ஆனால் அவர் குறிப்பிடுவது போன்ற எந்தவொரு செயலிலும் தான் ஈடுபடவில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையில், மெலிண்டா அளித்த பேட்டியில், இது தனது திருமண வாழ்க்கையின் வேதனையான பக்கங்களை நினைவூட்டுவதாகவும், இதற்கெல்லாம் பில்கேட்ஸ் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஒதுங்கிக்கொண்டது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
