2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நாளை (பிப்.15) கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்குச் சில முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வழங்கியுள்ளார். “இந்தியா தான் ஜெயிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒரு புதிய ஸ்பின்னர் இருக்கிறார், அவரை மட்டும் மிகவும் நிதானமாக (Safe) விளையாட வேண்டும். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்” என ஹர்பஜன் எச்சரித்துள்ளார்.

​ஹர்பஜன் குறிப்பிடும் அந்த ‘மர்ம’ வீரர் உஸ்மான் தாரிக் (Usman Tariq) என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பந்துவீச்சு பாணி தற்போது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீசும் போது இடையில் ஒரு நொடி சிலையைப் போல நின்று (Pause), பின்னர் பந்தை வீசும் இவரது வித்தியாசமான ஸ்டைல் பேட்ஸ்மேன்களைக் குழப்பமடையச் செய்கிறது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் போன்றவர்களே இவரது பாணியை ‘சக்கிங்’ (Chucking) என விமர்சித்த நிலையில், முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி இது முறையான பந்துவீச்சு தான் எனச் சான்றிதழ் அளித்துள்ளார். “எனது கையில் இயற்கையாகவே இரண்டு முழங்கைகள் (Two Elbows) போன்ற அமைப்பு இருப்பதால் தான் இப்படி வீசுகிறேன்” என உஸ்மான் விளக்கமளித்துள்ளார். இந்தப் புதிய சவாலை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.