2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் விற்கப்படும் குளிர்பானங்கள் குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானங்களை, ஊழியர் ஒருவர் மீண்டும் ஒரு பெரிய பாட்டிலில் ஊற்றி வைப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதனைப் பார்த்த ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கடும் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இது முற்றிலும் அருவருப்பானது மற்றும் ரசிகர்களை அவமதிக்கும் செயல். இதற்கு காரணமான ஸ்பான்சர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். மைதானங்களில் பெரிய பாட்டில்களைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்துவிட்டு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ‘சிங்கிள் யூஸ்’ பாட்டில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
This is just completely disgusting and shows total disregard for the fans. This sponsors should be heavily penalized as it’s there and only there responsibility to ensure hygiene and ethical standards and conduct. I am in complete shock. Large bottles should be immediately banned… https://t.co/YnVtlpSRWQ
— Lalit Kumar Modi (@LalitKModi) February 13, 2026
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி கிரிக்கெட் சங்கம் (DDCA), “அந்த வீடியோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. குப்பை மேலாண்மை விதிகளின்படி, ஈரமான மற்றும் உலர்ந்த குப்பைகளைப் பிரிக்கும்போது, மீதமுள்ள திரவத்தை அப்புறப்படுத்துவதற்காகவே அந்த ஊழியர் பாட்டிலில் ஊற்றினார். அவை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை” என்று மறுப்புத் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகக்கோப்பை போன்ற ஒரு சர்வதேச நிகழ்வில் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து எழுந்துள்ள இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
