சிவகங்கை மாவட்டம் ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது நெடுஞ்செழியன். இவர் எலும்பு முறிவு, முடக்குவாதம் மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்தவர். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இவர் மக்களிடையே பெரும் பிரபலமடைந்திருந்தார்.
ஆனால், இவரிடம் முறையான மருத்துவக் கல்விச் சான்றிதழ்கள் இல்லை என்ற புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவரைக் கைது செய்து மருத்துவமனைக்கும் சீல் வைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த நெடுஞ்செழியன், தனது தோப்பில் ‘செம்புவேல் முருகன்’ என்ற பெயரில் ஒரு கோவிலைக் கட்டி, அங்கும் தனது வைத்தியத்தைத் தொடர்ந்தார்.
View this post on Instagram
இங்குதான் அதிரடித் திருப்பம் அரேங்கேறியது. தன்னைத் தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட அனுமதிப்பதற்காக, இன்ஸ்பெக்டர் சீனிபாபு தன்னிடம் மாதந்தோறும் மாமூல் பணம் கேட்டுத் தொல்லை செய்ததாகவும், பணம் தரவில்லை என்றால் தன் மீது மீண்டும் பொய் வழக்குப் போட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி நெடுஞ்செழியன் சமூக வலைதளத்தில் ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி, சிங்கம்புணரி காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ஒரு போலீஸ் ஏட்டு தன்னிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணம் பெற்றுக் கொண்டதற்கான சிசிடிவி காட்சியையும் அந்த வீடியோவில் அவர் வெளியிட்டு ஆதாரத்தை அள்ளி வீசினார். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், லஞ்சக் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் ஏட்டு ஜெயராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. மணிவண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
