சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் 35 வயது சிவபாலன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் என்பவரின் மகளை சிவபாலன் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஒரே ஊர், சொந்த பந்தம் என்பதால் இந்த விவகாரம்  பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது.

காதலுக்கு ஒட்டுமொத்தக் குடும்பமும்  எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், காதலர்கள் இருவரும் காதலைக் கைவிட மறுத்துள்ளனர். குறிப்பாக, பெண்ணின் தம்பியான 19 வயது அருண்ராஜா இந்தக் காதலுக்குத் தீவிரமாகத் தடைபோட்டு வந்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இரு தரப்புக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சிவபாலன், பெண்ணின் தம்பியைத் தீர்த்துக்கட்டத் துணிந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. தன் மகனை அழிக்க வருபவனைச் சும்மா விடுவதா என்று கொதித்தெழுந்த தந்தை முருகேசனும், தம்பி அருண்ராஜாவும் மற்றும் உறவினர்களும் சேர்ந்து சிவபாலனை வழிமறித்துள்ளனர்.

அங்கு நடந்த கோரத் தாக்குதலில் கத்தி மற்றும் அரிவாளால் சிவபாலன் சரமாரியாக வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலையில் நேரடித் தொடர்பில் இருந்த தந்தை முருகேசன் மற்றும் தம்பி அருண்ராஜா ஆகியோரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் அரங்கேறிய இந்தச் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.