இந்திய ஆண்களைத் திருமணம் செய்யக் காத்துக்கொண்டிருந்த சுமார் 150 பாகிஸ்தான் மணப்பெண்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். சிந்தி சமூக வழக்கப்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் சிந்தி சமூக ஆண்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளுக்குத்தான் இந்தத் திருமணம் தற்போது சாத்தியமாகியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தன. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான அனைத்துத் தூதரக முயற்சிகளையும் இந்தியா அதிரடியாக நிறுத்திக் கொண்டது. பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசா வழங்குவதும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால் நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த மணமகன்களைத் திருமணம் செய்யவிருந்த பாகிஸ்தான் பெண்களின் பயணம் கேள்விகுறியானது.
மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதைக் கண்டு கவலைப்பட்ட சிந்தி சமூக அமைப்புகள், பாகிஸ்தானில் உள்ள ‘ஷடானி தர்பார்’ ஆன்மீக அமைப்பின் தலைவர் சாந்த் யதிஷ்டிர்லால் ஷடானியை அணுகி உதவி கோரினர். இதன் அடிப்படையில், இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் முழு விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த இந்திய அரசு, வான்வழி நுழைவுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. எனினும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தால், மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் நேரடியாக இந்தியாவுக்கு வர முடியாத சூழல் தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற மூன்றாம் நாடுகளின் வழியைத் தேர்ந்தெடுத்து அவர்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை சுமார் 150 மணப்பெண்கள் பத்திரமாக இந்தியா வந்துள்ள நிலையில், விசா அனுமதி கோரி இன்னும் 300 பெண்கள் வரை காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
