டர்ஹாம் கவுண்டி கிரிக்கெட் அணி டெர்பிஷயருக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் டெர்பி நகரில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின்படி, 31 வயதான பிரைடன் கார்ஸ் நான்கு காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்டு கைவிலங்குடன் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அவருடன் சக வீரரான மேத்யூ பொட்ஸ் மற்றும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அந்தப் பகுதியில் உடனிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்  டெர்பியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து தாங்கள் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, பிரைடன் கார்ஸ் முறையான கைது நடவடிக்கைக்கு ஆளாகவில்லை என்றும், விசாரணையின் அடிப்படையில் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி, பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், கடந்த காலங்களில் இங்கிலாந்து வீரர்கள் பலரும் இரவு விடுதி விவகாரங்களில் சிக்கியதும் இங்கிலாந்து கிரிக்கெட்டில் நிலவும் ‘குடிபழக்க கலாச்சாரத்தை’ மீண்டும் வெளிச்சத்திற்குப் கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பென் ஸ்டோக்ஸோ அல்லது பிரைடன் கார்ஸோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.மேலும் பிரைடன் கார்சை கைது செய்யும் பொழுது உடனடியாக பென் ஸ்டோக்ஸ் ஒளிந்து கொண்டு அதனை எட்டி எட்டி பார்த்ததாக கூறப்படும் ஒரு வீடியோவும் தற்போது வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.