சட்டப்பேரவையில் முதன்முறையாகப் பேசும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் உரையை ‘கன்னிப் பேச்சு’ எனக் குறிப்பிடும் வழக்கத்திற்கு, பெண் எம்.எல்.ஏ-க்கள் திரண்டு வந்து தங்களது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வார்த்தைப் பயன்பாடு குறித்து, பேரவையில் பெண் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​பேரவையில் இதுகுறித்து விரிவாகப் பேசிய செளமியா அன்புமணி, சட்டமன்றத்தில் முதன்முதலாக உரையாற்றுவதை ‘கன்னிப் பேச்சு’ எனக் சொல்வதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என இனிவரும் காலங்களில் மாற்றிக் குறிப்பிடலாம் என்ற புதிய கோரிக்கையை முன்வைத்தார். இந்த வார்த்தை மாற்றம் பெண் உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

​இவரைத் தொடர்ந்து பேசிய சிபிஎம் கட்சியின் எம்.எல்.ஏ லதா, சட்டமன்றத்தில் பயன்பாட்டில் இருக்கும் இந்தச் சொல் முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என மிகக் காரசாரமாக விமர்சித்தார். பெண்களுக்கு எதிரான இத்தகைய தொனி கொண்ட சொற்களைச் பேரவை குறிப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும், பெண் உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

​பெண் எம்.எல்.ஏ-க்களின் இந்த நியாயமான கோரிக்கையைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரத்தை சபாநாயகர் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பெண் உறுப்பினர்களின் இந்தக் கண்டனமும், அதைத் தொடர்ந்து எழுந்த விவாதமும் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.