சட்டப்பேரவையில் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் மரியவில்சன், பள்ளிக் கல்வித்துறையில் நடந்த கட்டாயப் பண வசூலால் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்று கூறி பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முந்தைய ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவத்திற்குத் தானே நேரடிச் சாட்சி என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவையில் உரையாற்றிய அவர், “என் மீது வழக்கு போடட்டும் அல்லது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும், அதைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்” எனச் சவால் விடுத்தார். முந்தைய ஆட்சியின் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தற்போது பேரவையில் இல்லை என்றாலும், தான் கூறும் குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.
மேலும், கல்வித்துறையில் எந்தெந்த இடங்களில் வைத்துப் பணம் பெறப்பட்டது என்ற முழுமையான விவரங்களையும், ஆதாரங்களையும் பேரவையிலும் நீதிமன்றத்திலும் என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சரின் இந்த அதிரடியான குற்றச்சாட்டு சட்டப்பேரவை வளாகத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் எதிர்தரப்பில் கடும் சலசலப்பையும் உருவாக்கியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற கட்டாய பண வசூல் குறித்து நிதி அமைச்சர் மரியவில்சன் முன்வைத்துள்ள இந்த நேரிடையான குற்றச்சாட்டும், அவர் விடுத்துள்ள வழச்சை சந்திக்கும் சவாலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
