கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் கூறி திமுக தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

​முன்னதாக, நீதிமன்ற உத்தரவின்படி கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், விவிபேட் சீட்டுகள் மற்றும் எந்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாக இருந்ததாகவும், எந்தவித முரண்பாடும் இல்லை என்றும் பெல் நிறுவன பொறியாளர்களின் சான்றிதழுடன் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது.

​இருப்பினும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் மென்பொருள் கோளாறுகள் உள்ளிட்ட பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, அனைத்து எந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.