மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுவர்களின் உடல்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு குதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்கர் பகுதிக்கு உட்பட்ட விவசாய விளைபொருள் சந்தைப் பகுதிக்குப் பின்னால் வசித்து வருபவர் நிரசிங் யாதவ். இவருடைய மகன்களான சச்சின் யாதவ் (12 வயது) மற்றும் பிரேம் யாதவ் (8 வயது) ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், பள்ளி முடிந்தபின் அவர்கள் வீடு திரும்பவில்லை.

பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், லவ்குஷ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பாலெந்திர சிங் என்ற நபர் சிறுவர்களை எதையோ சாப்பிடுவதற்குக் கூட்டிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குழியில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், கிராம மக்களின் உதவியுடன் மிகுந்த சிரமத்திற்கிடையே இரண்டு உடல்களையும் வெளியில் எடுத்தனர்.

சிறுவர்களைக் கொன்று குழியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது ஒரு காதல் விவகாரத்தின் காரணமாக நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளி பாலெந்திர சிங்கைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்த குடும்பத்தையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.