கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள், காசா பூமியை சுடுகாடாக மாற்றிவிட்டன. இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தற்போதைய போர் நிறுத்தக் காலத்திலும் கூட இஸ்ரேலின் தொடர் வான்வழி மற்றும் தரைவழி முற்றுகைகள் நின்றபாடில்லை. குண்டுவெடிப்புகளின் ஒலியை விடக் கொடூரமானது, அங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ள அன்றாடப் பசி மற்றும் சுகாதாரப் பேராபத்து.

உணவு, மருந்துப் பொருட்கள் என அத்தியாவசியத் தேவைகள் எதையும் காசாவுக்குள் அனுமதிக்காமல் எல்லைச் சாவடிகளிலேயே இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் காசாவை ஆட்கொண்டுள்ளது; ஊட்டச்சத்து குறைபாட்டால் பிஞ்சு குழந்தைகள்  கண்முன்னே உயிரை விடுகின்றனர். இந்தச் சூழலின் உச்சக்கட்டக் கொடுமையாக, அங்கு தற்போது எழுந்துள்ள மாபெரும் சிக்கல் கழிப்பறைகளுக்கான தட்டுப்பாடு!

இஸ்ரேலின் கடுமையான தடையால் சுகாதாரப் பொருட்களும் கழிப்பறை உபகரணங்களும் காசாவுக்குள் வருவது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஒரு சாதாரணக் கழிப்பறை இருக்கையின் விலை அமெரிக்க மதிப்பில் சுமார் 503 முதல் 671 டாலர் வரை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏழை எளிய மக்களால் இந்த விலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதால், உயிர் வாழ்வதற்காக அவர்கள் கண்டுபிடித்துள்ள வினோதமான தற்காலிக முறை அதிர்ச்சியைத் தருகிறது.

முகாம்களில் வசிக்கும் மக்கள், நிலத்தில் ஒரு ஆழமான குழி தோண்டுகின்றனர். ஒரு சாதாரணப் பிளாஸ்டிக் நாற்காலியின் நடுவில் துளையிட்டு, அதை அந்தக் குழியின் மேல் வைக்கின்றனர். குழியின் அடிப்பகுதியில் மணல் பரப்பப்படுகிறது; இந்த மணல் ஒரு இயற்கை வடிகட்டியாகச் செயல்பட்டு திரவக் கழிவுகளை உறிஞ்சி, துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுவர்களோ கதவுகளோ கிடையாது, நாற்காலியைச் சுற்றித் தற்காலிகத் துணிகளைத் தொங்கவிட்டு மறைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். கற்கால மனிதர்களை மிஞ்சும் இந்த அவல நிலையில், 20 முதல் 25 பேருக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால் தாய்மார்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி, காசாவில் உள்ள மக்களில் வெறும் பாதியினருக்கு மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 60 சதவீத மக்கள், தாங்கள் வாழும் இடத்திற்கு மிக அருகில் அதாவது வெறும் 10 மீட்டர் தூரத்திற்குள்ளேயே திறந்தவெளி மனிதக் கழிவுகளுடனும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீருடனும் வாழ்கின்றனர். இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் கடுமையான வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் வேகமாகப் பரவி வருகின்றன.

எல்லைகளில் இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் நிவாரணப் பொருட்கள் உள்ளே வராததே இந்த நிலைக்குக் காரணம் என்று வர்த்தக சபை குற்றம் சாட்டுகிறது. உடனடியாக சர்வதேச தொண்டு நிறுவனங்களும், யுனிசெப்  அமைப்பும் தலையிட்டு காசா மக்களுக்கு இலவசமாகக் கழிப்பறை உபகரணங்களை விநியோகிக்க வேண்டும் என்பதே பாலஸ்தீனியர்களின் கண்ணீருடன் கூடிய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.