தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கருத்துகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் தற்போதைய அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைவதற்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முந்தைய ஆட்சியில் விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்படாத பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான சொகுசு விடுதி போன்ற திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 50 முதுநிலை கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, திமுக எப்போதும் மக்களுக்கு நன்மையே செய்யும் என்றும், அதனால் திமுகவை ‘மக்கும் குப்பை’ என்றும், புதிதாக வந்திருக்கும் கட்சியை ‘மக்காத குப்பை’ என்றும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மேலும் வேவு பார்க்கும் வேலையை திமுக செய்கிறது என்று அமைச்சர் ரமேஷ் விமர்சித்திருந்த நிலையில் வேவு பார்ப்பது திமுகவின் வேலை அல்ல எனவும் கூறினார். இந்த அரசியல் வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
