லடாக்கின் லே பகுதிக்கு அருகே உள்ள மலைப்பாங்கான டாங்சே பகுதியில், இந்திய ராணுவத்தின் ‘சீதா’ ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த மே 20 அன்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிக்கிய லெப்டினன்ட் கர்னல், மேஜர் மற்றும் 3-வது காலாட்படை பிரிவின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா ஆகிய மூன்று ராணுவ அதிகாரிகள் அதிரடியாக உயிர் பிழைத்தனர்.

விபத்து நடந்த மலைப்பகுதியில், பலத்த சேதமடைந்த ஹெலிகாப்டரின் அருகே பாறைகளில் அமர்ந்தபடி, காயமடைந்த இந்த மூன்று அதிகாரிகளும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

இவ்வளவு கடுமையான மலைப்பகுதியில் மூன்று பேரும் உயிர் பிழைத்ததை ராணுவ அதிகாரிகள் ஒரு “அதிசயம்” என்று விவரித்துள்ளதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம், 1970-களில் இருந்து இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான ‘சீதா’ ஹெலிகாப்டர் பிரிவின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு சியாச்சின் பனிமலைப் பகுதியில் இந்தியப் படைகள் முக்கிய இடங்களைக் கைப்பற்றிய ‘ஆபரேஷன் மேகதூத்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் இந்த ஹெலிகாப்டர்கள் மிக முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த ரக ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி வருவதால், இவற்றைப் பாதுகாப்பு கருதி தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் தற்போது தீவிரமடைந்துள்ளன.