உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர், கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார்.
மேலும் சம்பவத்தன்று பர்சாவால் கிராமத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சங்கர் யாதவ் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சங்கர் யாதவ் தன்னிடம் இருந்த அரிவாளால் பப்லுவின் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்தக் கொலையை விடவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கொலை செய்த பின் சங்கர் யாதவ் எவ்விதப் பதற்றமும் இன்றி பப்லுவின் துண்டிக்கப்பட்ட தலையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனால் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சங்கர் யாதவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவர் கொல்லப்பட்டவரின் தலையை அருகில் வைத்துக்கொண்டு மிகச் சாதாரணமாகச் சமையல் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் உடனடியாக அவரைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பறிமுதல் செய்தனர்.
