டேட்டிங் செயலி மூலம் பழகிய இளம்பெண்ணை நேரில் சந்திக்கச் சென்ற வாலிபர் ஒருவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த அனூப் நருலா என்பவருக்கு, ‘3F’ என்ற டேட்டிங் செயலி வாயிலாக ‘ஷெர்ரி’ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பி அவரைச் சந்திக்கச் சென்ற அனூப்பை, ஷெர்ரி மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் சேர்ந்து மிரட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், அனூப்பின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாயை வலுக்கட்டாயமாகப் பறித்துவிட்டு, அவரைச் சாலையோரம் இறக்கிவிட்டுத் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் குறித்து அனூப் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஹர்லீன் கவுர் என்ற அந்தப் பெண், டேட்டிங் செயலிகள் மூலம் வசதியான இளைஞர்களைக் குறிவைத்துத் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து ஹர்லீன் கவுர் மற்றும் அவரது கூட்டாளிகளான நவோஜித், சாஹில், சஞ்சய் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
