உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலைப் பகுதியில் உள்ள நாய்களில் சிலவற்றின் ரோமங்கள் பிரகாசமான நீல நிறமாக மாறியுள்ள படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தப் படங்களை ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ என்ற அமைப்பு பகிர்ந்துள்ளது. இவர்கள் அந்த நாய்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள். 1986-ல் நடந்த செர்னோபில் அணு விபத்துக்குப் பிறகு விட்டுச் செல்லப்பட்ட செல்ல நாய்களின் வாரிசுகள்தான் இவை.
இந்த நாய்கள் மனிதர்கள் இல்லாத செர்னோபில் தடுப்பு பகுதியில் உயிர் வாழ்வதற்கு அடையாளமாகிவிட்டன. அங்கு விலங்குகள் செழிப்பாக வாழ்கின்றன. அமைப்பினர் சுமார் 700 நாய்களுக்கு உணவு, மருத்துவம், தங்குமிடம் அளித்து வருகின்றனர். 18 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் இவை வாழ்கின்றன.
சமீபத்திய கருத்தடை மற்றும் மருத்துவப் பரிசோதனையின் போது மூன்று நாய்களின் ரோமங்கள் திடீரென நீல நிறமாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாரம் முன்பு வரை அவை சாதாரணமாகத்தான் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர். திடீர் நிற மாற்றத்துக்கு என்ன காரணம் என்று அமைப்பினரும் குழப்பமடைந்தனர்.
அறியப்படாத ரசாயனப் பொருளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தொழிற்சாலை ரசாயனங்கள் அல்லது கன உலோகங்கள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். ரோமம், தோல், இரத்த மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்கின்றனர். “காரணம் தெரியவில்லை, நாய்களைப் பிடித்து ஆராய முயல்கிறோம். ரசாயனத்தில் விழுந்திருக்கலாம். ஆனால் அவை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளன” என்று அமைப்பு தெரிவித்தது.
