டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் பிரபலமான ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் கல்வி நிறுவனம் இயங்குகிறது. இங்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். அவர்களில், முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்தியுள்ளனர்.

அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி, பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அந்த மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதனை டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் அமித் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமியார் பார்த்தசாரதியை கைது செய்ய போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கி ஆசிரம நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் மாணவிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.