பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 1, 2025 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, ஆதார் அட்டையில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் தற்போதைய ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி) மாற்றங்களுக்கு கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்கிறது.
புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆதார் அட்டை சேவைகளை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் இந்த கட்டண உயர்வு அவசியம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உயர்வு மிகக் குறைந்த அளவே என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மக்களை நேரடியாக பாதிக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்தாலும், உயர்த்தப்பட்ட கட்டணம் பெரிய அளவில் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மக்களுக்கு சுமையாக இருக்காத வகையில் கட்டண உயர்வு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், இது ஆதார் சேவைகளின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆதார் அட்டை மூலம் அரசு நலத்திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடைவதால், இந்த சிறிய உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
