உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரத்தில் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 22 வயது ஜிதேந்திரா, செயின் பறிப்பு, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர். அவரைப் பிடிக்க போலீசார் பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. தொடர்ந்து தப்பி ஓடிய ஜிதேந்திராவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பெண் போலீஸார் அடங்கிய தனிப்படை நேற்றிரவு சோதனை சாவடி ஒன்றில் ரோந்து மற்றும் வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த ஜிதேந்திரா போலீசைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்றான்.
போலீசார் நிற்க சொன்னதை கேளாமல் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று கீழே விழுந்தான். சரண் அடையும்படி போலீசார் கூறியதும் ஆத்திரமடைந்த ஜிதேந்திரா துப்பாக்கியால் சுட்டான். பதிலடியாக பெண் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரது காலில் காயம் ஏற்படுத்தினர். இதன் பிறகு ஜிதேந்திராவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர் சம்பவமாகும்.
மூத்த காவல் அதிகாரி உபாசனா பாண்டே கூறுகையில், விசாரணையில் ஜிதேந்திரா டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் பைக், ஸ்கூட்டர்கள் திருட்டு, மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்றார். கைத்துப்பாக்கி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டது. இவை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டவை என்பதும், ஸ்கூட்டர் கடந்த ஆண்டு டெல்லியில் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
