தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கிஸ்மத்பூர் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து ராஜேந்திரா நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புதருக்கு அருகே கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. யகுத்புரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், ஹைதர்குடா நகருக்கு சென்றிருந்தார். அங்கு மதுபானம் குடித்துவிட்டு சாலையோரம் மயங்கி கிடந்தார். 33 வயது நபர் ஒருவர் அந்தப் பெண்ணை கண்டு, ஆட்டோவுக்குள் அழைத்துச் சென்று பீர் மற்றும் பிரியாணி வாங்கிக் கொடுத்தார்.

இதன் பிறகு, கூட்ட அரங்கு ஒன்றிற்கு அருகே அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் போதையில் இருந்த அந்தப் பெண்ணை ஆரம்கார் எக்ஸ் சாலை பகுதியில் இறக்கிவிட்டு தப்பினார். இதனை 25 வயது கொண்ட 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கவனித்தனர். டோலி சவுகி பகுதியைச் சேர்ந்த அவர்கள், அந்தப் பெண்ணை மயக்கி பேசி, கட்டாயப்படுத்தி கடத்தி சென்று ஆட்டோவில் ஏற்றினர். அந்த பெண்ணை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த 2 ஆட்டோ ஓட்டுநர்கள், மது குடித்து போதையானதும் அடுத்தடுத்து பலமுறை பலாத்காரம் செய்தனர்.

அப்போது, அந்தப் பெண் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் பெண்ணை கடுமையாகத் தாக்கினர். அப்போது கட்டையை கொண்டு அடித்ததில், அந்தப் பெண் பலியானார். இதனால் பயந்து போன அவர்கள் இருவரும் உடலை புதரருகே போட்டுவிட்டு தப்பியோடினர். சைபராபாத் போலீஸ் ஆணையரகம் வெளியிட்ட செய்தியின்படி, நாமபள்ளி முதல் ஹைதர்குடா வரையிலான பகுதிகளில் நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், 3 பேரையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 3 பேருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.