ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், ஈரானில் தங்கியுள்ள சுமார் 1,100 இந்தியக் காஷ்மீர் மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள் கட்டிடங்களைத் தாக்கும் சத்தத்தைக் கேட்டு அச்சத்தில் இருக்கும் மாணவர்கள், கல்வி நிலையங்கள் வெளியேற அனுமதி மறுத்ததால் அங்கேயே முடங்கியுள்ளனர்.
தங்களின் பிள்ளைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அவர்களைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று இந்திய மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நிச்சயமற்ற சூழலும் நிலவி வருகிறது..
