அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி உட்பட நால்வர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொழுதுபோக்கு பகுதியில் ஒரு மதுபான விடுதி அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்கு மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலியான நால்வரில் ஒருவர், இந்தியாவிலிருந்து சென்று அங்கு கல்வி பயின்று வந்த 21 வயதான சவிதா சண்முகசுந்தரம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“சவிதா இன்னும் சில மாதங்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க இருந்தார். அவர் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரட்டைப் பட்டப்படிப்புகளை பயின்று வந்தார். படிப்பில் மிகவும் சிறந்து விளங்கிய அவர், ஒரு முன்மாதிரியான மாணவியாகத் திகழ்ந்தார்.”
ஆஸ்டின் மெக்கோம்ப்ஸ் வணிகக் கல்லூரியில் பயின்று வந்த சவிதா, சக மாணவர்களிடையே ‘சூப்பர் ஸ்டார் மாணவி’ என்று போற்றப்பட்டதாக அவரது நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இது தனிநபர் மோதலால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்றும், பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் உள்ளூர் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் அந்த நாட்டைச் சேர்ந்த நிடியாகா டியாக்னே என்ற 54 வயது நபர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
