பொதுவாக அமைதியான சூழலில் அமர்ந்து காபி குடிப்பதுதான் பலருக்கும் பிடிக்கும். ஆனால், கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில், செங்குத்தான ஒரு பாறையின் விளிம்பில் தொங்கிக்கொண்டு காபி குடிப்பதைப் பற்றி கற்பனை செய்திருக்கிறீர்களா? சீனாவில் உள்ள ஒரு வினோத காபி ஷாப் இப்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைந்துள்ள ‘குஷி கிளிஃப் காபி’ (Gushi Cliff Coffee) என்ற இந்த காபி ஷாப், உலகின் மிகவும் அபாயகரமான உணவகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செங்குத்தான ஒரு மலையின் விளிம்பில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பிளாட்பாரத்தில் அமர்ந்துதான் வாடிக்கையாளர்கள் காபி குடிக்க வேண்டும். காலுக்குக் கீழே சீறிப்பாயும் கடல் அலைகள், கையில் ஒரு கப் காபி என இந்த அனுபவம் சாகசப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்த காபி ஷாப்பிற்குச் செல்வது அத்தனை எளிதல்ல. முதலில், வாடிக்கையாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். பின்னர், அங்கிருக்கும் பயிற்சியாளர்களின் உதவியுடன், பாதுகாப்பு கயிறுகள் மூலம் 60 மீட்டர் உயரத்தில் தொங்கும் அந்த பிளாட்பாரத்திற்கு இறக்கி விடப்படுவார்கள்.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்பீடு (Insurance) இன்றி யாரும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு ஒரு கப் காபியின் விலை 398 யுவான். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4,700 ரூபாய் ஆகும். விலை அதிகமாகத் தோன்றினாலும், இதில் பாதுகாப்பு உபகரணங்களுக்கான வாடகை, பயிற்சியாளர் கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அந்த உயரமான இடத்திற்குச் சென்றுவிட்டால், வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கு அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம்; காலக்கெடு எதுவும் கிடையாது.

இந்த காபி ஷாப் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ‘பறக்கும் சீனா’ (FlyOverChina) என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது, இதில் எப்படி காபி குடிக்கிறார்கள்?” என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கு இது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தாலும், சாகச விரும்பிகளுக்கு இது ‘வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்’ என்பதில் சந்தேகமில்லை.