சென்னை விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்றத்தில் பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விரிவாக பேச வேண்டும்.

மத்திய அரசு நாடாளுமன்ற நிர்வாகம் இந்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும். விரிவாக விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பல விமர்சனங்களை கூறுகிறார். அதை வரவேற்கிறோம். அவர் பாஜகவின் வழிகாட்டுதல் அடிப்படையில் இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக வளர துடிக்கிறது. அதிமுகவை பலவீனப்படுத்தத் துடிக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அதிமுகவுடன் தோழமை உணர்வு தான் இருக்கிறது. அதிமுக சிதைந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டிக்காட்டுகிறோம். அதிமுக மீது எடப்பாடி பழனிச்சாமி மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

அதிமுக பாஜக கூட்டணியை சிதைப்பதற்கு விமர்சனம் செய்யவில்லை. ஒரு தோழமை உணர்வோடு தான் சுட்டி காட்டுகிறேன். அந்த கூட்டணி உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. அதிமுக ஒரு திராவிடர் இயக்கம். எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம். நட்புணர்வுடன் தான் பேசுகிறோம். தேவை இல்லை என்றால் பேசப்போவதில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.