“தவெக, நாதக, பாமக, அன்புமணி, ராமதாஸ் ஆகியவை திமுக அரசுக்கு எதிராக இருக்கின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் இணைந்தாலே தான் திமுகவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறும். அதனால்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் ஆடிமாவாசையையொட்டி நடைபெற்ற தர்ப்பண நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவுக்கு எதிராக 80 சதவீதம் மக்கள் உள்ளனர். ஆனால் எதிர்க்கும் சக கட்சிகள் பிரிந்து நிற்பதால், அந்த எதிர்ப்பு பலவீனமாகி விடும். அந்த காரணத்தால்தான் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பை முயற்சி செய்கிறார். திமுகவிற்கு மாற்று அளிக்கக்கூடிய மக்கள் நம்பிக்கை உள்ள தலைவர் எடப்பாடிதான்” என்றார்.
மேலும், “அன்வர்ராஜாவின் விலகல் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒருவரது தனிப்பட்ட முடிவால் கட்சி பாதிக்கப்படாது. அதை பொது விவாதத்திற்கு கொண்டுவர தேவையில்லை. நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம். இடையில் எலி, அணில் ஓடுவது பற்றி கவலைப்பட வேண்டாம். ஓ.பி.எஸ். இணைப்பு என்ற கேள்வி காலாவதியானது. அதிமுகவுடன் சேர விரும்பும் கட்சிகளுக்கு பாஜக தடையாக இருக்கிறதா என்ற கேள்விக்கு – நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்” என கூறினார்.
மதுரை மாநகராட்சி ஊழல் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், “ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டுபிடிக்கப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு கஜானா மக்கள் பணம் என்பதற்கேற்ப பாதுகாக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அரசு பணத்தை சட்டைப் பையில் எடுத்து வைத்து கொண்டு இருப்பது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 500 கோடி, ஆயிரம் கோடி என மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நிலையில் குற்ற உணர்வு இல்லாமல் செயல்படுவது வேதனை தருகிறது” என்று கூறினார்.
கூட்டணியில் யார் யார் இணையப்போறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தவிர்ந்த அவர், “பொறுத்திருந்து பாருங்கள். கணக்கை கூட்டிக் கழித்து பாருங்கள். எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையனின் குறி எப்போதும் வெற்றி தரும்” என வலியுறுத்தினார். “நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணைகள் அனைத்தும் அதிமுகவுக்கு தடையாக இருக்காது. ஆடி முடிந்து, ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்” என நம்பிக்கையுடன் கூறினார்.
