பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக – தவெக இடையே தான் போட்டி என நடிகர் விஜய் கூறி வருகிறார். நாளை இந்தியாவையே பிடித்துவிடுவேன் என அவர் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் இது சினிமா அல்ல; அரசியல். தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விலைபோகாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து குறைந்தது 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜய் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரு கட்சிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்டமைப்பு அவசியம். தவெக கட்சியில் இதுபோன்ற அமைப்பு எதுவும் இல்லை. இதை குறையாக கூறவில்லை; நடைமுறை அரசியல் நிலையை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன் என்றார்.
ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தற்போதைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றும், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இலக்கு. அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
