நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பாஜகவின் அடிமையாக மாறிவிட்டது என்றும், இபிஎஸ் ஒரு முரட்டு அடிமை என்றும் திமுகவினர் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் நிலையில், “அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமையில்லை” என அவர் ஆவேசமாக முழங்கினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தன்னை பற்றி என்னவெல்லாம் அவதூறு பேச முடியுமோ, அந்த அளவிற்குப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். அப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகழ்பெற்ற ‘வின்னர்’ பட வசனத்தைப் பயன்படுத்தி, “கட்டதுரை திருந்துற மாதிரியே தெரியல” என ஸ்டாலினை அவர் கிண்டலடித்தார். இபிஎஸ்-ஸின் இந்த சினிமா பாணி விமர்சனம் அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கைதட்டலையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.
