தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை திங்கள்கிழமை (பிப். 9) நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களது கட்சி நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்கும் என்று கூறி, அதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு கடிதத்தை என்.ஆர். தனபாலன் வழங்கினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர். தனபாலன், தமிழகத்தின் நலன் கருதி அதிமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும், தேர்தல் பணிகளில் அதிமுகவுடன் இணைந்து தங்கள் கட்சியினர் தீவிரமாகப் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது அதிமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதில் அதிமுக தீவிரம்காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.