தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக அதிமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மனோகரன், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார்.

கடந்த சில காலமாக அதிமுகவின் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த இவர், தற்போது த.வெ.க-வில் இணைந்துள்ளார். இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் த.வெ.க-வில் இணைந்துள்ளார். இவர் 2006-2011 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் வாய்ந்த இந்த நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், இவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட அதே தொகுதிகளில் த.வெ.க சார்பில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ச்சியாக மூத்த நிர்வாகிகள் விஜய்யின் கட்சியை நோக்கி நகர்வது மற்ற அரசியல் கட்சிகளிடையே ஒருவித அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.